Thursday 15 January 2015

ஐ விமர்சனம் – இனிமே எந்தப் படத்தைப் பார்த்தாலும் பிஸ்கோத்து மாதிரிதான் தெரியும்!

டீசர் டிரைலரைப் பார்க்கும் போதே… படம் எப்படா ரிலீஸ் ஆகும் எனும் எதிர்பார்ப்பை உருவாக்கி காத்திருக்க வைத்துவிட்ட ஐ, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு நிறைவு செய்கிறது…?


விளம்பர மாடல் எமியின் தீவிர ரசிகர் விக்ரம். பாடி பில்டிங்கில் மிஸ்டர் இந்தியாவாகிவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்காக தினமும் பயிற்சி செய்து வருகிறார். அந்த நேரத்தில் எமியுடன் விளம்பரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் விக்ரம் மளமளவென மாடலிங்கில் முதலிடம் பிடிக்கிறார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் விக்ரமின் உருவமே மாறுகிறது. அகோர வடிவத்தை அடையும் விக்ரம், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து கொஞ்சம் வித்தியாசமான முறையில் பழிவாங்குவதுதான் இந்தப் படத்தின் கதை.

திருமண நாளில் மணப்பெண் எமியை கடத்திச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். எமியை கூடையில் வைத்து ரயிலில் கடத்திச் சொல்லும் காட்சியில் துவங்கிறது படத்தின் விறுவிறு திரைக்கதை. ஆள் அரவமற்ற பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் எமியை அடைத்து வைக்கிறார் விக்ரம். தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடித்து பழி வாங்க ஆரம்பிக்கிறார். விக்ரம் பழிவாங்கும் காட்சிகளை தனியாக சொல்லாமல் ப்ளாஷ்பேக்கையும் அவ்வப்போது சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்தின் ஹீரோ விக்ரம்… என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது. ஒவ்வொரு ப்ரேமிலும் விக்ரமின் உழைப்பு படம் முழுக்க அவரை ஆச்சரியமாய் பார்க்க வைக்கிறது. பாடி பில்டிங் காட்சிகளில் ஆரம்பித்து கூன் விழுந்த உடம்புடன் படம் முழுக்க வலம் வரும் விக்ரம், விக்ரமுக்கு இணையான நடிகர்… விக்ரம்தான் என்று சொல்ல வைக்கிறது. எமி… வெறும் கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக வருகிறார் எமி. விளம்பர மாடலான இவர், தன்னுடன் பணியாற்றும் விளம்பர மாடலின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். எமியின் சினிமா கேரியரில் ஐ முக்கியமான படமாக இருக்கும். காமெடியும் குணச்சித்திரமும் கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். இவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். சந்தானம் பவர் ஸ்டார் வரும் காட்சிகள் படத்திற்கு அவசியமில்லை என்றாலும் சிரிப்பை வரவழைக்க சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

சைடு எடுத்து தலையை வாரின உடனே அவனை சரத்பாபுன்னு நெனச்சிட்டியா…? என்று வரும் வசனத்திற்கு ஏற்ப டாக்டராக வரும் சுரேஷ் கோபி அத்தனை வேலை பார்க்கிறார். இவரது கேரக்டர் ரொம்பவே சஸ்பென்ஸாக நகருகிறது. தொழிலதிபராக நடித்திருக்கும் ராம்குமார் கேரக்டர் நிஜ தொழிலதிபரை நினைவுபடுத்துகிறது. மாடலாக வரும் உபென் படேல்… வில்லத்தனத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஷங்கர், சுபாவின் திரைக்கதை வசனத்தில் கிண்டலான வசனங்களும் சரி சீரியஸான வசனங்களும் சரி… ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. நான் என்னடா… பண்ணினேன்… என்னை ஏண்டா இப்படி பண்ணுனீங்க… என்று வில்லன் கோஷ்டிகளிடம் விக்ரம் கேட்கும் காட்சி செம டச்சிங். இது போன்ற மனதைத் தொடும் காட்சிகள் படம் முழுக்க அவ்வப்போது வந்து போகின்றன.
ஆன்டனியின் செம க்ரிப்பான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. எப்படித்தான் ஒளிப்பதிவு பண்ணியிருப்பாங்களோ… என்று ஆச்சரியப்பட வைக்கிறது ஒவ்வொரு ஷாட்டும். சீனாவில் வரும் சண்டைக்காட்சிகள்… பாடல் காட்சிகள்… என படம் முழுக்க பிசி ஸ்ரீராமின் காமிரா கைவண்ணம். மெர்சலாயிட்டேன்… உன்னோடு… முணுமுணுக்க வைக்கும் பாடல்கள். பின்னணி இசையிலும் ரஹ்மான் முத்திரை பதித்திருக்கிறார். படத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர். ஷங்கரின் பிரமாண்ட… ஹிட் படங்களின் வரிசையில் ஐக்கும் ஒரு சீட்…!

No comments:

Post a Comment