Monday 12 January 2015

ஐ படத்தில் சண்டை, காமெடி, நடனம் என அனைத்திலும் அசத்திய எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் நடிப்பில் வரும் ஜன.14-ந் தேதி வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். விக்ரம்-பி.சி.ஸ்ரீராம்-ஏ.ஆர்.ரகுமான்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் என பெரிய கூட்டணி இணைந்திருக்கும் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை எமிஜாக்சன்  வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டார்.

 


எமிஜாக்சனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

1. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட ‘ஐ’ திரைப்படம் வெளியாகவிருப்பது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?

‘ஐ’ படம் ரிலீஸ் ஆவது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், இது இரண்டரை ஆண்டு கால பயணம். இப்படம் இப்போது வெளியாவது எனக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு பயத்தையும் கொடுக்கிறது.

2. ‘ஐ’ படம் முடிந்தபிறகு, அதை முதல்முறை திரையில் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் இன்னும் படத்தை பார்க்கவே இல்லை. அதனால் சிறிது பதற்றமாகவே இருக்கிறது, படத்தில் ஒரு சில காட்சிகளை பார்த்திருக்கிறேன் ஆனால், முழு படமாக பார்க்கவில்லை. ஜனவரி 14 ஆம் தேதி ‘ஐ’ எனக்கு வியப்பாகத்தான் இருக்கப்போகிறது.

3. ‘ஐ’ படத்தில் உங்கள் கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்கள்

இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் தியா. சர்வதேச மாடலாக இருக்கும் தமிழ் பெண்தான் தியா. நடிப்பதற்கு அதிக வாய்ப்புகளை கொண்ட கதாபாத்திரத்தை ஷங்கர் சார் எனக்கு கொடுத்துள்ளார்.

இப்படத்தில் எனக்கு சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளும் உள்ளன. இது வெறும் கவர்ச்சி மற்றும் அழகு சார்ந்தது மட்டுமாகவே இருக்காது, மிக வலிமையானதாக இருக்கும்.
அருமையான தமிழ் வசனங்கள், அழகான நடன அசைவுகள் எல்லாம் இப்படத்தில் இருக்கிறது. இதுதான் நான் இதுவரை ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் சிறந்தது.

4. எந்த காட்சியில் நடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டீர்கள்?

சீனாவில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் நானும் விக்ரமும் நடித்துள்ளோம். அக்காட்சியில் இடம்பெற்றுள்ள வசனம் சென்னை தமிழில் இருந்தது. ‘என்னப்பா லிங்கேசா, வூடு கட்டி அடிச்சு தூள் கிளப்பிட்ட போலகிது’ என்னும் வசனம் இடம்பெறும் அக்காட்சி எனக்கு சவாலானதாக இருந்தது. இதுதான் இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி.

5. விக்ரம், ஷங்கர் போன்ற புகழ்பெற்றவர்களுடன் பணிபுரிந்தது பற்றி?

விக்ரம், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் நான்கு பேருடன் ஒரே படத்தில் இணைவது எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் அனைவருமே மேதைகள்.

ஷங்கரின் அழகான கற்பனை, யோசிக்கும் திறன் மற்றும் விக்ரமின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அனைவரும் அறிந்ததே. பி.சி. ஸ்ரீராம் கைகளில் கேமரா வித்தைகளை காட்டும். அவரது கேமராவின் முன் நடிக்கவேண்டும் என்பது அனைத்து கதாநாயகிகளின் கனவாகும்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை, பாடல் வரிகள், இசையமைப்பு ஆகிய அனைத்தும் மிக எளிமையாக நடிக்கக்கூடிய உணர்வை அளித்தது. இது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ‘ஐ’ படத்தில் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம். இப்படத்திற்காக நான் முழுமனதுடன் வேலை செய்துள்ளேன். நிச்சயமாக ‘ஐ’ இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

6. ‘ஐ’ படத்தில் உங்கள் விருப்பமான பாடல்

‘என்னோடு நீ இருந்தால்’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருமுறை அந்த பாடல் கேட்கும் போதும் என் மெய்சிலிர்க்கிறது. அந்த பாடலை படமாக்க எங்களுக்கு 2 வாரங்கள் ஆனது. இந்த பாடலில் விக்ரம் மிருக தோற்றத்தில் தோன்றுகிறார். நான் ஒரு இளவரசியை போல தோற்றமளிப்பேன்.
எனது அறிமுக பாடலான ‘லேடியோ’ பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். இது என்னுடைய சோலோ பாடல் என்பதால் எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும்.

7. ‘ஐ’ படம் உங்களுக்கு என்ன கொடுத்துள்ளது?

இந்த படம் எனக்கு நிறைய நல்ல அனுபவங்களை கொடுத்திருக்கிறது. நிறைய நண்பர்கள், அறிவுரைகள், ஷங்கர் இயக்கத்தில் நடித்தது என அனைத்தும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.

8. ஒரு பெண்ணாக இருப்பதில் எதை சிறப்பானதாக கருதுகிறீர்கள் ?

அழகான, வித்தியாசமான உடைகளை அணிந்துகொள்ள வாய்ப்பிருப்பதை தான் சிறப்பாக கருதுகிறேன்.

9. நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படும் ஒரு நபரா?

இல்லை. நான் உணர்ச்சிவசப்பட நேர்ந்தால் அந்த தருணத்தில் அமைதியாகிவிடுவேன். நான் சோகமாக இருந்தால் என் அம்மாவிற்கு தெரிந்துவிடும். ஏனென்றால் அப்போது நான் பேசாமல் இருப்பேன். நான் எப்போதும் சத்தம் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியது இல்லை.

10. இந்திய சினிமா துறையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

இந்திய சினிமா துறை உலகெங்கிலும் புகழ்பெற்றது. 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய சினிமா துறை வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியான படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரங்கள் வழங்கப்பட்டதால் பெண்களின் பங்களிப்பு வலுவானதாக மாறிவருகிறது.

11. உங்கள் ட்ரீம் டேட் யாருடன் இருக்க வேண்டுமென விருப்பம்?

நான் பாரக் ஒபாமாவுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.

12. உங்கள் அடுத்த படங்களைப்பற்றி சொல்லுங்கள்

அடுத்து நான் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். நீளமான ஜடை, தாவணி, சுடிதார், புடவை என இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடிக்கிறேன். இந்த படத்திற்கு பின் உடனடியாக தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் பெண்ணின் வேடம். இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

13. தமிழ் திரைத்துறையில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? வருங்காலத்தில் யாருடன் நடிக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது.

குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. திறமை மிக்க நிறைய பேர் இங்கு உள்ளனர். நான் கடந்த ஆண்டு ‘ராஜா ராணி’ படம் பார்த்தேன். அப்படத்தின் இயக்குனர் மிகவும் பிரஷ்ஷாகவும், புதுமையாகவும் அப்படத்தை இயக்கியிருந்தார்.

நடிகர்களை பொருத்தவரை உதயநிதி, தனுஷ் போன்றவர்களுடன் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மாஸ் படத்தில் சூர்யாவுடன் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. விரைவில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment