Saturday 13 December 2014

தலையங்கம்: "திரையில் அணைகட்டிய இரண்டாம்பென்னிகுக்' மிஸ்டர் ரஜினிகாந்த்...!

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள்... திருவிழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. இதே நாளில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வெளியாகி இருக்கிறது.. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார்கள் ரஜினி ரசிகர்கள்..

வழக்கம் போல விடிய விடிய முழித்திருந்து அத்தனைவித அபிஷேகங்கள் மூலமாக "தங்கள் தெய்வத்துக்கு" "வழிபாடு" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.. அனேகமாக "கண்ணா! இத... இதத்தான் எதிர்பார்த்தேன்" என்பதுதான் ரஜினியின் எதிர்க்குரலாகவும் இருக்கலாம்..

தலையங்கம்:
ரஜினிகாந்தின் திரை உலகப் பயணம் நீண்டது... இத்தனை ஆண்டுகாலம் உயர உயரப் பறந்து கொண்டே இருக்கிறார்.. இதனாலேயே அவரது சம்பளமும் பட வசூலும் "நூறுகள்" கோடிகளை தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.. அத்தனைவிதமான நடிப்புகளையும் வெளிப்படுத்துகிற அசாத்திய நடிகராக இருப்பதால் தொடர்ந்தும் "சூப்பர் ஸ்டாராக" ஜொலிக்கிறார்.

இப்படி தமிழ் மக்கள் கொண்டாடுகிற ஒரு தகத்தகாய "தலைவர்", "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று ஒற்றை வரி வாக்குறுதியை மறக்காமல் "ஒவ்வொரு" திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.. அவருக்கும் வயது 64 ஆகிவிட்டது.. இன்னமும் அவர் கொண்டாடும் தமிழகத்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம் (தனிப்பட்ட உதவிகளைத் தவிர்த்து)

எம்.ஜி.ஆர். - ஆர்.எம்.வீரப்பன் மோதல் தொடங்கிய 1980களில் இருந்து ரஜினியின் "அரசியல் பிரவேச" எதிர்பார்ப்பு அத்தியாயம் தொடங்கியது.. பின்னர் 1990களில் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு பலமாக மையம் கொண்டது..1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் கூட அவரது "வாய்ஸ்" உதவியது.

இதனால் ரஜினியின் "அரசியல் பிரவேசம்" என்பதை விட "வாய்ஸ்" கொடுத்தாலே போதும் என்ற நிலை உருவாகி அரசியல் பெருந்தலைவர்கள் வாசல்படியில் காத்துக் கிடக்கத் தொடங்கினார்கள்.. அப்படி அவர் "வாய்ஸ்" கொடுத்தும் போணியாகாமல் போன காட்சிகளும் தமிழகத் தேர்தல் களத்தில் அரங்கேறின..

ஆனாலும் அசராத ரஜினிகாந்த் திடீரென நதிநீர் இணைப்புக்கு ரூ1 கோடி கொடுப்பதாக அறிவித்தார்.. அந்தத் திட்டத்தை முன்னெடுக்க துரும்பையும் கிள்ளிபோட்டதாக தெரியவில்லை..

2002ஆம் ஆண்டு தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராத கர்நாடகத்துக்கு எதற்கு தமிழகத்து நெய்வேலி மின்சாரம் என்று கொந்தளித்த திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ளாத ரஜினி மறுநாள் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்து "தமிழ்நாட்டு" பாசத்தைக் காட்டினார்...

இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமை சார்ந்த பிரச்சனைகளில் எப்போதுமே ஒதுங்கியே, மவுனமாக இருந்துவிடுவதுதான் ரஜினியின் இயல்பு. ஒருவேளை தங்களது உரிமைக்காக போராடும் தமிழ்நாட்டு மக்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி செய்ய நினைத்த "நல்லது" இதுதானா என்பதும் புரியவில்லை..

இந்த மண்ணின் மக்கள் வெறித்தனமான நேசித்து கொட்டும் காசில் உயரப் பறக்கும் ரஜினிகாந்த், வெறித்தனமாக இந்த மண்ணின் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டு உரிமைகளை மீட்டுத் தந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாதோ என்னவோ?

ஆனால் ரஜினியின் சகோதரரோ தமிழ்நாட்டு மண்ணில் நின்று கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டலாம்; அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என்றெல்லாம் பேசிவிட்டு செல்கிறார். பின்னர் திடீரென மன்னிப்பும் கோருகிறார்.. தமிழ்நாட்டு ரசிகர்களும் செய்வதறியாமல் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கிறார்கள்..

தற்போது லிங்கா படம் வெளியாகி இருக்கிறது.. தமிழ்நாட்டின் "ஹாட் டாபிக்" முல்லைப் பெரியாறு... அதன் சாயலில் ஒரு படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்தாகிவிட்டது.. ஓட்டியாக வேண்டும் என்பதற்காக மீண்டும் இசைவெளியீட்டு விழாவில் "அரசியல் எனக்குத் தெரியாதுன்னு இல்ல.. தயக்கமாக இருக்கு" என்று சொல்கிறார்..

இதோ ரசிகர்களும் ரஜினி எதிர்பார்த்தபடியே "தலைவா! வா! தலைமை ஏற்கவா!! "இரண்டாம் பென்னிகுக்கே" என்று மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி தியேட்டர்களில் தவம் கிடக்கிறார்கள்.. (இரண்டாம் பென்னிக்குக் என்று ஜெயலலிதாவையும் அதிமுகவினர் சமீபத்தில் வர்ணித்து சந்தோஷித்தனர் என்பது நினைவிருக்கலாம்)

இங்கிலாந்தில் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று பெரும் போராட்டத்தை நிஜவாழ்வில் எதிர்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு அணைகட்டியவர் "பெருமகனார்" பென்னிகுக்...

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் காசில் "திரைப்படத்தில் அணைகட்டி" தனக்கு ஊதியம் பெறுகிறவர் ரஜினிகாந்த் என்ற உண்மையை உணரக்கூட முடியாத "மயக்கத்தில்" இருப்பவர்கள் தானே ரசிகர்கள்.பாவம்!

நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அவர்களும் உணர்வதில்லை.. ஒருநாளும் ரஜினியும் திட்டவட்டமாக உணர்த்தப்போவதும் இல்லை..

அடுத்த திரைப்படத்துக்கு முன்பாகவும் ரஜினியின்- 'அரசியல் பரபரப்பு' பேச்சுக்கு எதிர்பார்த்து காத்திருப்போம்.. "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்ற "உத்தரவாத"த்துக்கு பொறுத்திருப்போம்.. அந்தப் படத்தையும் உலக திரைப்பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலை வாரித் தருவோம்- வரலாறு படைப்போம்!

நல்லது மிஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீங்க நடத்துங்க 'எஜமான்!'

No comments:

Post a Comment