Friday 12 December 2014

லிங்கா - திரை விமர்சனம்

தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?
 
 
சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். 
 
அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயிலை திறக்க வேண்டுமென்றால் அதனை கட்டிய லிங்கேஷ்வரனின் குடும்ப வாரிசு முன்னிலையில்தான் திறக்க வேண்டும். அதுதான் உடன்பாடு. 
 
யார் இந்த லிங்கேஷ்வரன்...?
 
பிளாஷ்பேக்கில் வருகிறார் வெளிநாட்டில் படித்து உள்ளூரில் கலெக்டராக பொறுப்பேற்கும் தாத்தா ரஜினி. அப்படியே பென்னி குயிக்கின் கதை. ரஜினிக்கேற்ப கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். சோலையூரில் அணையில்லாததால் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் மாறி மாறி பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். அங்கு அணைகட்ட முடிவு செய்கிறார் ரஜினி.

பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு அனுமதி மறுக்க, கலெக்டர் வேலையை தூக்கியெறிந்து சொந்தப் பணத்தில் மக்களின் துணையுடன் அணை கட்டுகிறார் ரஜினி. அரசாங்கத்தை எதிர்த்தால் என்னென்ன இடையூறு வருமோ அத்தனையும் வருகிறது ரஜினிக்கு. திறப்புவிழாவிலும் தொடர்கிறது பிரச்சனை. வீரத்தால் வீழ்த்த முடியாதவரை வஞ்சகத்தால் வீழ்த்தி ஊரைவிட்டே துரத்தப்படுகிறார். ஜனங்களுக்கு உண்மை தெரியவர, அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
 
 
  <i>Lingaa</i> Movie Review
 
அந்த லிங்கேஷ்வரனின் பேரன்தான் நிகழ்காலத்து ரஜினி. இவர் பெயரும் லிங்கேஷ்வரன்தான். சந்தானம், கருணாகரனுடன் ஜாலி திருடனாக இருக்கும் அவரை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருகிறார்கள். பூனையின் கண் கருவாட்டின் மீதுதானே. வந்த இடத்திலும் கோயிலுக்குள் இருக்கும் மரகத லிங்கத்தை ஆட்டையப் போட முயல்கிறது ரஜினி அண்ட் கோ. தாத்தா லிங்கேஷ்வரனின் கதையை கேட்டு மனம் மாறும் ரஜினி எப்படி அரசியல்வாதியியை முறியடித்து அணையை மீட்கிறார் என்பது மீதிகதை.
படத்தின் சென்டர் சைடு அண்டர் என எல்லா அட்ராக்ஷனும் ரஜினி மட்டுமே. அவரும் அறிமுகப் பாடலில் அசத்தோ அசத்தென்று ஒரு ஆட்டம் போடுகிறார். அப்புறம்..? ரஜினியை குறை சொல்ல ஒன்றுமில்லை. என்னதான் ஆடத்தெரிந்தாலும் மேடை ஸ்ட்ராங்காக இருக்கணுமே. ரவிக்குமாரின் திரைக்கதையில் எண்ணித்தீராத ஓட்டைகள். தாத்தா லிங்கேஷ்வரனின் நீளமான பிளாஷ்பேக்கும் அணை பற்றியதுதான். பேரனின் நீண்ட கதையும் அதே அணைதான். ஒரே கதையை இரண்டு தடவைப் பார்ப்பது போல் கொஞ்சம் இழுவை.
 
ரஜினியின் முந்தையப் படங்கள் நினைவில் பிளாஷ் அடிப்பது இன்னொரு குறை. முத்துவில் சொத்தை இழக்கிறார் ரஜினி. சிவாஜியிலும் இழக்கிறார். படையப்பாவில் மணிவண்ணனிடம் சொத்தை இழக்கிறார். அருணாச்சலத்திலும் அப்படியே. அதையேதான் இதிலும். ஜாலி திருடனாக இருக்கும் ரஜினி தாத்தாவின் தியாகம் அறிந்து திருந்துவதும் கத்தி கதிரேசன் திருந்தும் சிச்சுவேஷனும் ஒன்று போலவே இருக்கிறது. 
 
லிங்கா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு கதைக்கு ஆப்டாக இருப்பதைவிட அழகாக இருக்க வேண்டும். ராண்டி அதனை அனாயாசமாக ஹேண்டில் செய்திருக்கிறார். படத்தை காப்பாற்றும் முக்கிய தூண் அவர்தான். இன்னொருவர் கலை இயக்குனர். ரஜினி படம்தானே நாம கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது ரஹ்மான். பின்னணி இசையில் நிறைய போதாமைகள்.
 
சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆறு மாதத்தில் அவசர அவசரமாக எடுத்ததால் கொஞ்சம் கார்ட்டூன் எபெக்ட். அழகுக்கும், டூயட்டுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள் அனுஷ்காவும், சோனாக்ஷியும்.
 
படத்தின் நீளம் அதிகம். ஒரே கதை இரண்டுமுறை ரிப்பீட் அடிப்பது போலிருப்பதால் ஆர்வத்தோடு உள்ளே நுழைகிற ரசிகன் அயர்ச்சியோடுதான் வெளியேறுகிறான். ரஜினிக்காக ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

No comments:

Post a Comment