Tuesday, 2 December 2014

காவியத் தலைவன் விமர்சனம்

சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ் நாடக உலகத்தையும், நடிகர்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக வெளிவந்திருக்கிறது, வசந்தபாலனின் காவியத் தலைவன். வரலாற்றில் வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, அவரது காதல் மனைவி சுந்தராம்பாள் ஆகியோரின் சாயலைக் கொண்டிருக்கின்றன படத்தில் வரும் கதாபாத்திரங்கள். 
 
kaaviyathalaivan, காவியத்தலைவன் விமர்சனம்
 
 
ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடித்தி வருகிறார் சிவதாஸ் சுவாமிகள் (நாசர்). அவரது சீடர்களில் ஒருவன் கோமதி நாயகம் பிள்ளை (பிருத்விராஜ்). இன்னொருவன் காளியப்ப பாகவதர் (சித்தார்த்). காளியப்பனுக்குக் கிடைக்கும் பாராட்டும், புகழும் கோமதி நாயகத்தை எப்படி வன்மம் கொள்ள வைக்கிறது என்பதுதான் படத்தின் அடிநாதம். கே.பி.சுந்தராம்பாளை நினைவுப்படுத்தும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வேதிகா.
 
ஒருவனின் புகழும் வளர்ச்சியும் இன்னொருவனை எவ்வளவு தூரம் வன்மம் கொள்ள வைக்கின்றன என்ற தளத்தில் இந்தக் கதை பயணித்திருந்தால் அதுவொரு சிறந்த அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் படம், காதல் உள்பட பல கிளைக் கதைகளில் பரவிச் செல்கிறது. வசந்தபாலனின் படங்களில் காணப்படும், பார்வையாளர்களைத் தீண்டாத உணர்ச்சி வெளிப்பாடுகள், இந்தப் படத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன. உதாரணமாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பைப் பார்த்துப் பார்வையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் படம் பார்க்கும் நமக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை. வசந்தபாலனின் திரைக்கதை தொடர்ந்து இந்த இடத்தில்தான் சறுக்குகிறது.
 
காளியப்ப பாகவதரின் அரண்மனைக் காதல், நம்ப முடியாத வகையைச் சேர்ந்தது. இது படத்துக்கு எந்தளவு நியாயம் செய்கிறது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். படத்தின் மற்றுமொரு குறை, சித்தார்த்தை முன்னிறுத்துவது. காளிப்பனைவிட கோமதி நாயகத்தின் நடிப்பே நம்மைக் கவர்கிறது. சூரபத்மனாகவும் கோமதி நாயகமே சிறப்பாக நடிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் சிவதாஸ் சுவாமிகள், காளியப்பனைத் தேர்வு செய்கிறார். அதுதான் கேமதி நாயகத்தின் மனத்தில் வன்மத்தை வளரச் செய்கிறது. சித்தார்த், பிருத்விராஜை விடத் தமிழில் தெரிந்த நடிகர் என்பதால் அவரை வசந்தபாலன் முன்னிறுத்தியிருக்கலாம். ஆனால் படத்தில் அது தவறான முடிவாகவே தெரிகிறது. வடிவாம்பாளாக கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார் வேதிகா.
 
ஒளிப்பதிவு ஓரளவு நம்மை அந்தக் காலக்கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் ரஹ்மானின் இசை பல நேரம் நம்மை நிகழ்காலத்துக்கு இழுத்து வருகிறது. அந்தக் கால இசையுடன் அவரால் பொருந்த முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தக் கால இசைதான் இல்லையே தவிர, படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பாகவே உள்ளன. இரண்டாவது பகுதியை நாம் நீந்திக் கடக்க உதவுவதும் அவரது இசையே.
 
படத்தின் நீளத்தைக் குறைத்து, காட்சிகளில் அழுத்தத்தை ஏற்றியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். வசந்தபாலனின் திரைக்கதைதான் அவரை மறுபடியும் மறுபடியும் குப்புறத் தள்ளுகிறது. அடுத்த படத்திலாவது அதனைச் சரிசெய்ய அவர் முன்வர வேண்டும்.
 
வெளிநாட்டுப் படங்களுக்கு சாயம் ஏற்றும் முயற்சியில் இருக்கும் தமிழ் சினிமாவில், நமது வேரைத் தேடிய வசந்தபாலனின் பயணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது, பல குறைகள் இருப்பினும்.

No comments:

Post a Comment